வழிபாடு

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வணங்கிய அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2022-09-08 08:10 GMT   |   Update On 2022-09-08 08:10 GMT
  • உலகேஸ்வரசாமி கோவில் பல நுாற்றாண்டுகள் பழமையானது.
  • இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி 12 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில், கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களின் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக மின் விளக்குகளும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விழா குழுவினர் கூறியதாவது:-

உலகேஸ்வரசாமி கோவில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற திருத்தலம் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. உலகேஸ்வர சுவாமியை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்டனர் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது.

இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமுலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி 12 தீர்த்த கிணறுகள் இருந்துள்ளது. கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சிஅளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News