வழிபாடு

கோவில்களில் பைரவாஷ்டமி வழிபாடு

Published On 2022-06-22 04:30 GMT   |   Update On 2022-06-22 04:30 GMT
  • பைரவருக்கு சோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.
  • சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பைரவரை பக்தர்கள் வழிபட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வடுக பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தானம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர் சுவாமி, அம்பாள், பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் பைரவருக்கு சோடச உபசாரங்கள், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பைரவரை பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்தனர். இதேபோல் அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது.

யாகத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள் இடப்பட்டன. மேலும் கைலாசநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்து, வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Tags:    

Similar News