வழிபாடு

வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றம்

Published On 2023-07-24 02:38 GMT   |   Update On 2023-07-24 02:38 GMT
  • நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு நடக்கிறது.
  • நாளை காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், ஏகதின அன்னைத்தமிழ் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, முனியப்பன், பகாசூரன் வழிபாடு ஆகியன நடைபெற்றது.

இந்த நிலையில் 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து யாகம் வளர்த்தல், காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகளை செய்திருந்தார்.

தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தேக்கம்பட்டி ஊர் கவுடர் திருநாவுக்கரசு தலைமையில் வரதராஜ் முன்னிலையில் சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட கொடி தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அங்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் சிம்ம வாகன கொடி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளித்தனர். அம்மன் சன்னதியில் சிம்ம வாகன கொடிக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு கொடி மரம் முன்பு எடுத்துவரப்பட்டது.

அங்கு சிறப்பு பூஜைக்கு பிறகு கொடி மரத்தில் நாதஸ்வர இசை, மேள-தாளம் முழங்க கொடி ஏற்றபட்டது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.

Tags:    

Similar News