வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்ப கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி

Published On 2022-06-27 06:46 GMT   |   Update On 2022-06-27 06:46 GMT
  • இந்த கோவிலில் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • கும்பகலசங்கள் ஓசூரில் தங்க முலாம் பூசுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவில் கருவறை விமானம், உதய மார்த்தாண்ட மண்டபம் மேற்கூரை அஷ்ட பந்தன காவியால் பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலசங்கள் பொருத்தப்பட உள்ளன. இதனையொட்டி கிருஷ்ணன் கோவிலில் செம்பிலான கும்பகலசங்கள் உருவாக்கப்பட்டு ஓசூரில் தங்க முலாம் பூசுவதற்காக கொண்டு செல்லப்பட்டன. அங்கு இதற்கான பணி நடந்து வருகிறது.

அதன்படி கருவறை மூலவர் சன்னதியின் மேற்பகுதியில் 5 கலசங்களும், ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல்பகுதி கூரையில் ஒரு கலசமும், உதய மார்த்தாண்ட மண்டபத்தின் மேல் ஒரு கலசமும் பொருத்தப்பட உள்ளது. முக்கிய கலசம் 3 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளது. ஓசூரில் தங்கமுலாம் பூசும் பணிகள் நிறைவடைந்ததும் கும்ப கலசங்கள் திருவட்டாருக்கு கொண்டு வரப்பட்டு விமானத்தில் பொருத்தப்படும்.

கும்பாபிஷேக நாளில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. போதிய இடவசதி குறைவாக இருப்பதால் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் நேரில் காண கோவிலின் உள் பகுதி மற்றும் வெளிப்புறங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. டிவி.க்கள் அமைக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

மேலும் திருவட்டார் நான்கு முனை சந்திப்பில் இருந்து கோவில் வரை தற்காலிக கடைகள் வைக்க அனுமதி இல்லை என பேரூராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவே இந்த நடவடிக்கை என பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன் தெரிவித்தார். இதற்கிடையே சா மியின் பா தத்தில் பூஜையில் வைக்கப்பட்ட கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

முதல் அழைப்பிதழை அறநிலையத்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் குமாரகோவில் முருகன் குழும அதிபர் சிதறால் எஸ்.ராஜேந்திரனிடம் வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அழைப்பிதழ் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகன் குமார், வள்ளலார் பேரவை பத்மேந்திரா சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதே சமயத்தில் கும்பாபிஷேக பணியையொட்டி திருவட்டார் நான்கு முனை சந்திப்பில் இருந்து கோவில் வரை குண்டும், குழியுமாக இருந்த சாலை பகுதி நேற்று சரி செய்யப்பட்டது. தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணி, அலங்கார விளக்குகள், போர்டுகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

Tags:    

Similar News