வழிபாடு

இயேசுவை தொட்ட பெண்

Published On 2022-06-21 05:14 GMT   |   Update On 2022-06-21 05:14 GMT
  • இயேசுவை சுற்றி நெருக்கி நின்று கொண்டு இருந்த பலரது கரங்கள் அவரை தொடவும் செய்தன.
  • அவர்களுடைய நெருக்கமோ அல்லது தொடுதலோ இயேசுவை திரும்பி பார்க்க வைக்கவில்லை.

அன்றும் இயேசு வழக்கம்போல் திரளான மக்கள் மத்தியில் இறை செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொழுகை கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர், இயேசுவிடம் "நீர் வந்து சாகும் தறுவாயில் இருக்கும் என்னுடைய மகள் மீது உமது கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்று பிழைத்துக் கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார். அவருடைய வேண்டுதலை ஏற்று கொண்ட இயேசு, அவருடன் புறப்பட்டார்.

அப்போது அங்கிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டமும் நடக்க இருக்கும் நிகழ்வை காணும் ஆர்வத்தில் அவரை நெருக்கியபடி அவருடன் சென்றனர். யாயிரின் வீட்டை நோக்கி வேகமாய் சென்று கொண்டிருந்த இயேசுவின் நடை திடீரென்று தடைப்பட்டது. அவர் நின்று, திரும்பி, தான் பின்னால் இருந்த கூட்டத்தை பார்த்து "என்னை தொட்டவர் யார்?" என்று வினவினார். உடன் இருந்தவர்களோ 'இவ்வளவு கூட்டம் அவரை நெருக்கி நடக்கும் போது, தன்னை தொட்டது யார்? என்று இவர் கேட்கிறாரே' என்று குழம்பி போயினர். (மாற்கு 5 : 21-31)

இயேசு நிற்கவும், திரும்பி பார்த்து தன்னை தொட்டது யார் என்று கேள்வி கேட்கவும் காரணம் தான் என்ன? விவிலியம் அதற்கான பதிலை கொடுக்கிறது.

பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப்போக்கு நோயினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த கூட்டத்தில் இருந்தார். அவர் தன்னுடைய சொத்துகள் முழுவதையும் விற்று பணத்தை செலவழித்து மருத்துவம் பார்த்தும் சுகம் கிடைக்காமல் வருந்தினார். இயேசுவை பற்றி கேள்விபட்ட அவர், 'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்' என்று எண்ணிய படி இயேசுவின் பின் வந்து அவருடைய ஆடைகளை தொட்டார். உடனே தனது நோய் நீங்கி சுகமும் பெற்றார்.

அவருடைய இந்த தொடுதலே இயேசுவை திரும்பிப் பார்க்க வைத்தது. 'இயேசுவின் கரங்கள் தன் மீது பட வேண்டும், அவர் என்னை தொட வேண்டும் அப்போது எனக்கு விடுதலை கிடைக்கும்' என்று எண்ணி அவரின் முன் நின்ற பலரின் மத்தியில், அவரின் பின் சென்று, 'அவருடைய ஆடையை தொட்டாலே போதும் நான் சுகம் பெறுவேன்' என்ற அந்த பெண்ணின் விசுவாசமே இயேசுவை நிற்க வைத்தது. அந்த பெண்மணி தொட்டதோ இயேசுவின் ஆடையைத் தான். ஆனால் அவரின் விசுவாசமோ தேவனுடைய உள்ளத்தையே தொட்டது. அதனால் தான் இயேசு திரும்பி பார்த்து 'என்னை தொட்டவர் யார்?' என்று கேட்டார். (லூக்கா 8 : 45)

உண்மையில் அந்த பெண்மணியின் தொடுதலோ அல்லது இயேசுவின் ஆடையோ அவருக்கு சுகத்தை பெற்று தரவில்லை. 'அவர் தொட்டால், நான் சுகம் பெறுவேன்' என்று விசுவாசித்த பலரின் மத்தியில் 'அவரை அல்ல, அவருடைய ஆடையை தொட்டாலே நான் சுகம் பெறுவேன்' என்ற அவருடைய முழுமையான உன்னத நம்பிக்கையே, இயேசுவிடம் இருந்து வல்லமை வெளிப்பட்டு, அவரின் நோய் நீங்க காரணமாய் அமைந்தது. ஏனெனில் இயேசு அவரை பார்த்து 'மகளே, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ' (லூக்கா 8 : 48) என்று கூறியதன் மூலம் அவருடைய உண்மையான விசுவாசமே அவரை சுகப்படுத்தியது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். பல வருடங்களாய் தனது பணத்தை எல்லாம் செலவழித்தும் கிடைக்காத விடுதலையை, அந்த பெண்மணி முழு விசுவாசத்துடன் இயேசுவை தொட்ட அந்த ஒரு நொடியிலேயே பெற்று கொண்டார்.

இந்த நிகழ்வின் போது இயேசுவை சுற்றி நெருக்கி நின்று கொண்டு இருந்த பலரது கரங்கள் அவரை தொடவும் செய்தன. அவர்களுடைய நெருக்கமோ அல்லது தொடுதலோ இயேசுவை திரும்பி பார்க்க வைக்கவில்லை. ஆனால் ரத்தப்போக்கினால் அவதிப்பட்ட இந்த பெண்மணியின் கரத்தின் தொடுதல் மட்டும் இயேசுவை நின்று திரும்பி பார்க்க வைத்ததுடன், அவருடைய வல்லமையையும் வெளிப்பட வைத்தது. அதற்கு காரணம், அவருடைய தொடுதலில் இருந்த உண்மையான முழுமையான விசுவாசமே.

இயேசுவின் அருகில் இருந்த மற்றவர்களின் தொடுதலை போல் அல்லாமல், ஜெயத்தை பெற்று, இயேசுவை நின்று திரும்பி பார்க்க வைத்த இந்த பெண்மணியின் தொடுதலை போல் நம்முடைய ஜெபங்களும் முழுமையான விசுவாசத்துடன் கூடியதாக இருக்கட்டும்.

Tags:    

Similar News