வழிபாடு

திருப்பதியில் ஏழுமலையானுக்கு 1 மணி நேரம் மட்டுமே ஓய்வு

Update: 2022-06-28 05:33 GMT
  • ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
  • புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள்.

திருப்பதி

திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் 2 நாள் பயிற்சி முகாமை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதில் தேவஸ்தான தலைமை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் பேசியதாவது:-

ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் உள்ளதால் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பை அதிகரிக்க திருப்பதி திருமலை இடையே உள்ள மலைப்பாதையில் வேக கட்டுப்பாடு அமைக்கப்படும். வாகனங்கள் அதிவேகமாக வந்தால் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாகன எண் பலகை ஸ்கேனர் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்து நடந்தாலோ அல்லது திருட்டு நடந்தாலோ உடனடியாக விவரம் அறிய இது உபயோகமாக இருக்கும்.

உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி அமைக்கப்படும். இதேபோன்று ஏழுமலையானின் நகைகளை கொண்டு செல்லும் வாகனத்திற்கும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படும்.

ஏழுமலையானை கோடை காலத்தில் சராசரியாக தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களில் 10 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள். இதில் கருட சேவைக்கு மட்டுமே 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ரத சப்தமியன்று ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள்.

தற்போது தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர். சேவாக்கள் மூலம் 3,500 பேரும், விஐபி தரிசனம் மூலம் 4 முதல் 5 ஆயிரம் பேரும், சர்வ தரிசனம் மூலம் 25 முதல் 45 ஆயிரம் பேரும், முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் என 2 ஆயிரம் பேரும் என சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலையானுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News