வழிபாடு

சயன கோலத்தில் அருள்பாலித்த தேவி கருமாரியம்மனை படத்தில் காணலாம்.

சயன கோலத்தில் அருள்பாலித்த தேவி கருமாரியம்மன்

Published On 2022-09-12 06:27 GMT   |   Update On 2022-09-12 06:27 GMT
  • பெண்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
  • செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சமபோஜன விருந்து நடைபெறும்.

மதுரை எல்லீஸ் நகர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோவிலில் 37-வது ஆண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடந்த 8-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 9-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றது.

அதன்பின்னர் சமபந்தி விருந்து, மாலையில் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் அம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

திருவிழாவையொட்டி நேற்று மாலை பெண்கள் முளைப்பாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு முளைப்பாரியை வைத்து கொண்டு கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதன்பின்னர் வைகை ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று ஆற்றில் முளைப்பாரியை கலைத்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் ஊஞ்சலில் அம்மன் சயனக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அம்மனை தரிசித்தனர்.

திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு மதுரை மேஸ்ட்ரோ இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சமபோஜன விருந்தும், அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அவனி மாடசாமியின் சிரிப்பும் சிந்தனையும் என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறும். வருகிற 18-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்களுக்கு திருவிழா பிரசாதங்கள் வழங்கப்படும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோவில் பக்த சபையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News