வழிபாடு
குன்றக்குடி கோவிலில் இருந்து பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்

குன்றக்குடி கோவிலில் இருந்து பழனிக்கு காவடி எடுத்து சென்ற பக்தர்கள்

Published On 2022-01-13 04:24 GMT   |   Update On 2022-01-13 04:24 GMT
தைப்பூச திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே குன்றக்குடி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்றனர்.
ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி பழனி தண்டாயுத பாணி கோவிலுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாகவும், ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாகவும் நடந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான பக்தர்கள் மட்டும் தினந்தோறும் பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், மணச்சை, கே.வேலங்குடி, ஜெயம்கொண்டான், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்தும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்தாண்டு தைபூசத்திருவிழா வருகிற 18-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு செல்கின்றனர். காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடியும், ஜெயகொண்டான், திருப்பத்தூர், பள்ளத்தூர், கே.வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாட்டார்கள் காவடியும் குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவடிகள் பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கியும், நீர் மோர் வழங்கியும் வருகின்றனர். பக்தர்கள் பாதயாத்திரையாக சாலையில் நடந்து செல்லும் போது திண்டுக்கல் சாலையில் செல்லும் பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News