ஆன்மிகம்
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

Published On 2021-03-05 03:15 GMT   |   Update On 2021-03-05 03:15 GMT
அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தின்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த தானியங்களை தேரின் மீது தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தீர்த்தமலை அடிவாரத்தில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசிமக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி விநாயகர் பூஜை, தீபாராதனை, கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. மறுநாள் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு சுவாமி ரதம் ஏறுதலும், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மதியம் 2 மணிக்கும் நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் தீர்த்தமலையின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. முதல் தேரில் சுவாமி விநாயகர் திருவீதி உலாவும், அதன் பின் இரண்டாவதாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் தீர்த்தகிரீஸ்வரர், உடன் வடிவாம்பிகை அம்மனும் ஒன்றாக ,இருந்த தேர் வீதி உலாவும் நடைபெற்றது. மூன்றாவதாக வடிவாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தின்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த தானியங்களை தேரின் மீது தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி பொரி கடலை மற்றும் நவதானியங்களை தேரின் மீது தூவி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த தேரோட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News