ஆன்மிகம்
பகவதி அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

கிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளினார்

Published On 2020-10-28 01:56 GMT   |   Update On 2020-10-28 01:56 GMT
கன்னியாகுமரியில் கிழக்கு வாசல் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். ஆறாட்டு நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கிழக்கு வாசல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பிரதான நுழைவு வாசலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடல் மார்க்கமாக வந்த சரக்கு கப்பல் ஒன்று பகவதிஅம்மனின் வைரக்கல் மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கத்தின் ஒளி என்று கருதி கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி வந்தது. அப்போது அந்த கப்பல் கடலுக்கு அடியில் இருந்த பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து கிழக்கு வாசல் மூடப்பட்டது. அதன்பிறகு கோவிலின் பிரதான நுழைவு வாசலாக வடக்கு வாசல் பயன்படுத்தப்பட்டு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகம், விஜயதசமி, திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஆகிய 5 முக்கிய திருவிழா நாட்களில் மட்டும் கோவிலின் கிழக்கு வாசல் ஒரு மணிநேரம் மட்டும் திறக்கப்படும். அப்போது, அம்மனுக்கு கடலில் ஆறாட்டு நடத்தப்பட்டு அந்த வாசல் வழியாக கோவிலுக்குள் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அந்த வாசல் வழியாக பக்தர்களும் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று இரவு கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மகாதானபுரத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி முடிந்த பின் பகவதி அம்மன் கன்னியாகுமரி கோவிலின் நுழைவு வாசலை அடைந்தார். பிறகு அங்கிருந்து உற்சவ அம்பாள் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள கடற்கரைக்கு சென்றார். அங்கு ஆறாட்டு மண்டபத்தில் உற்சவ அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது.

ஆறாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவ அம்பாளை கோவிலின் கிழக்கு வாசலில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக உற்சவ அம்பாள் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்களும் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

பின்னர், உற்சவ அம்பாளை கோவில் மூலஸ்தானத்தின் வடக்கு பக்கம் உள்ள தியாகசவுந்தரி அம்மன் சன்னதியில் எழுந்தருளச் செய்தனர். அதன்பிறகு வெள்ளி பல்லக்கில் சிறிய அம்மன் விக்ரகத்தை எழுந்தருளச்செய்து மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வரச்செய்தனர். வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாள பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, அறங்காவலர்குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கன்னியாகுமரி பகவதிஅம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், செயலாளர் முருகன், பொருளாளர் நாதன், சட்ட ஆலோசகர் எஸ்.பி.அசோகன், மாவட்ட இந்து முன்னணி பொருளாளர் திரவியம், மாவட்ட பா.ஜனதா கட்சி தொழில் பிரிவு செயலாளர் சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News