ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தகால் நடப்பட்ட போது எடுத்தப்படம்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2020-10-19 06:33 GMT   |   Update On 2020-10-19 06:33 GMT
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 15-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 24-ந் தேதி மோகினி அலங்காரமும், 25-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 31-ந் தேதி திருக்கைத்தல சேவையும், ஜனவரி 1-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 3-ந் தேதி தீர்த்தவாரியும், 4-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அரசு வழிகாட்டுதலின்படி, நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள், வேதங்கள் சொல்ல, மேள, தாளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தியது. அப்போது முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர், அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News