ஆன்மிகம்
கோவை இஸ்கான் கோவிலில் ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவியுடன் அருள்பாலித்த காட்சி.

கோவையில் எளிமையாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2020-08-12 04:57 GMT   |   Update On 2020-08-12 04:57 GMT
கோவையில் கிருஷ்ண ஜெயந்தி விழா எளிமையாக நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர்.
குழந்தைகளின் மனம் கவரும் கிருஷ்ணர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக பக்தர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பெரிய கோவில்கள் திறப்பதற்கும், பக்தர்கள் வழிபடுவதற்கும் அனுமதி தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவையில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி பக்தர்கள் கூட்டம் இன்றி எளிமையாக நடைபெற்றது.

இந்த நாளில் கிருஷ்ணர் குழந்தையாக தங்களது வீடுகளுக்கு வருவது போன்று கால்தடங்களை பக்தர்கள் வீட்டின் வாசலில் இருந்து பூஜையறை வரை வரைந்தனர். மேலும் தங்களது வீட்டில் உள்ள கிருஷ்ணர்-ராதை சிலைகளை பூக்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்தனர்.

கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில் ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். மேலும் கிருஷ்ணர்-ராதை சிலைகளும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பூஜைகள் மற்றும் தீபாதாரனை நிகழ்ச்சிகள் சமூக வலைத்தலங்களில் ஒளிபரப்பப்பட்டன.

இதுதவிர கிருஷ்ணர் குறித்த வினாடி வினா போட்டிகள், மாறுவேட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரை போட்டிகள் போன்றவை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

மேலும் பக்தி வினோத சுவாமி மகராஜ் மற்றும் பக்தர்களின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. மேலும் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து மகிழ்ந்தனர். அவர்கள் கோவிலுக்கும் அழைத்து வரப்பட்டனர். மேலும் பக்தர்கள் தங்களது வீடுகளில் முகக்கவசம் அணிந்து கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடினர். கிராமப்புறங்களில் உள்ள கிருஷ்ணர் மற்றும் ராமர் கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு கிருஷ்ணரை வணங்கி சென்றனர்.
Tags:    

Similar News