ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் நடைபெறும் பணியை செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி பார்வையிட்ட காட்சி.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை

Published On 2020-07-14 04:33 GMT   |   Update On 2020-07-14 04:33 GMT
‘பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் தாமதமானது. இதனால் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மார்ச் மாத இறுதியில், கொரோனா ஊரடங்கு காரணமாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. கடந்த மாதத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து கோவிலில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ராஜகோபுரத்துக்கு சாரம் அமைக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை, பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கோவில் வளாகத்தில் 171 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ரூ.6 கோடியே 47 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.

கோவிலின் உள் பிரகாரத்தில், தற்போது எவ்வித வேலையும் செய்யவில்லை. குறிப்பாக ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள் சுதைகளால் ஆனவை. எனவே அவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கான நன்கொடை வசூல் தற்போது மேற்கொள்ளவில்லை. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஆன்லைன் மூலம் நன்கொடை வசூலிக்கப்படும். ஆனால் அதற்கு முன்பு யாராவது நன்கொடை வசூல் செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News