ஆன்மிகம்
ஆதிகும்பேஸ்வரர் கோவில்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா 28-ம் தேதி தொடங்குகிறது

Published On 2020-02-26 08:54 GMT   |   Update On 2020-02-26 08:54 GMT
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா நாளை மறுநாள் 28-ம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவையொட்டி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய சைவ கோவில்களிலும், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகபெருமாள் ஆகிய வைணவ கோவில்களிலும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த மாசிமக பெருவிழா கும்பேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள்(வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு சுவாமி இந்திரவாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. 29-ம் தேதி கமல வாகனத்திலும், மார்ச் 1-ந் தேதி பூதவாகனம், கிளிவாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மாசிமக பெருவிழாவையொட்டி தினமும் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரி‌‌ஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது.

பின்னர் 12 சிவாலய சுவாமிகளும், மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளுகின்றனர். பின்னர் அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து அஸ்திர தேவர்கள் மகாமக குளத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News