ஆன்மிகம்
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம்

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23-ந் தேதி நடக்கிறது

Published On 2019-12-04 05:43 GMT   |   Update On 2019-12-04 05:43 GMT
மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து வருகிற 23-ந் தேதி புறப்படுகிறது.
மண்டல, மகரவிளக்கு பூஜைக்காகசபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந் தேதிதிறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்அபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது.சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி சாமிதரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து வருகிற 23-ந் தேதி ஊர்வலமாக சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு ஊர்வலம் புறப்படும். இரவு ஓமல்லூரிலும், 24-ந் தேதி இரவு கோண்ணியிலும், 25-ந் தேதி இரவு பெரிநாட்டிலும், தங்கி இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி, 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் 27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.

சீசனையொட்டி, நடை திறக்கப்பட்டு 41-வது தினத்தில் மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மகர விளக்கை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசிதிப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடக்கிறது.

தங்க அங்கி ஊர்வலம் கொண்டு செல்லப்படும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த பாதைகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News