ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-06-15 06:33 GMT   |   Update On 2019-06-15 06:33 GMT
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருமஞ்சன விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜ ரத்தினசபாபதி தீட்சிதர் கொடியை ஏற்றி வைக்கிறார். 30-ந்தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. தொடர்ந்து அடுத்தமாதம் (ஜூலை) 1-ந்தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 2-ந்தேதி வெள்ளி பூதவாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. 3-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடக்க இருக்கிறது. தொடர்ந்து 4-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 5-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 6-ந் தேதி தங்க ரதத்திலும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலை தேர்த் திருவிழாவும், இரவு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. பின்னர் 8-ந்தேதி காலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன விழா நடைபெறுகிறது.

அப்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மூன்று முறை முன்னும், பின்னும் நடனம் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதுவே ஆனித்திருமஞ்சன விழாவாகும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். 9-ந்தேதி முத்துப்பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவுடன் விழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாஸ்கர் தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News