ஆன்மிகம்

கள்ளழகர், சோலைமலை கோவில்களில் வசந்த உற்சவ விழா

Published On 2019-05-19 07:39 GMT   |   Update On 2019-05-19 07:39 GMT
கள்ளழகர் கோவில் மற்றும் சோலைமலை முருகன் கோவிலில் வசந்த உற்சவ விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த விழா கடந்த 9-ந்தேதி மாலையில் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.

நேற்று 10-வது நாள் விழாவில் பவுர்ணமி நிறைவு நாளில் மேள, தாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதே மண்டபத்தில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து அதே பரிவாரங்களுடன் சுவாமி கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் 6-ம் படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசிமாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த விழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் சண்முகார்ச்சனையும், விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் பின்னர் சுவாமி புறப்பாடும் நடந்தது.

பவுர்ணமி நிறைநாளான நேற்று 10-வது நாள் வைகாசி விசாகத்தையொட்டி அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு குடம், குடமாக பாலாபிஷேகமும், தொடர்ந்து பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலியும், தீபாராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க, சுவாமி பல்லக்கில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்து சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மூலவர் வித்தக விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, ஆதிவேல் சன்னதிகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
Tags:    

Similar News