ஆன்மிகம்

திருப்பதி கோவில் தெப்ப உற்சவம் 16-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-02-23 04:55 GMT   |   Update On 2019-02-23 04:55 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் கோவில் அருகே உள்ள தெப்ப குளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான 16-ந் தேதி உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத் தொடர்ந்து உற்சவர்களை தெப்ப தேரில் வைத்து தெப்ப குளத்தை 3 முறை சுற்றி வரப்படும்.

17-ந் தேதி ருக்மணி சமேத கிருஷ்ணர் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. 18-ந் தேதி உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 19-ந் தேதி உற்சவரான மலையப்பசாமியை தேரில் வைத்து தெப்ப குளத்தை 5 முறை சுற்றி வரப்படும்.

கடைசி மற்றும் 5-வது நாளான 20-ந் தேதி உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப குளத்தை 7 முறை சுற்றி வரப்படும். தெப்ப உற்சவத்தையொட்டி 5 நாட்களுக்கும் வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News