ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செங்கமல தாயார்.

திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் தாயார் உற்சவம்

Published On 2018-12-31 04:43 GMT   |   Update On 2018-12-31 04:43 GMT
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தாயார் உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில், ஆண்டு தோறும் தாயார் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செங்கமல தாயாருக்கு உற்சவம் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை செங்கமல தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடைபெற்று, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினசரி செங்கமல தாயாருக்கு காலையில் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படும். பின்னர் மாலையில் சாமி வீதி உலா நடைபெறும். இதில் வருகிற 7-ந்தேதி திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் தாயார் உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும். எனவே இந்த நாளில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி தேவநாத சாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மார்கழி மாத பூஜையும் நடக்கிறது. பின்னர் காலை 5.30 மணியில் இருந்து சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

புத்தாண்டு வழிபாட்டிற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்க கோவிலில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவில் சுற்றிலும் மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து, பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News