ஆன்மிகம்

சாரங்கபாணி அளித்த திதி

Published On 2018-11-02 07:32 GMT   |   Update On 2018-11-02 07:32 GMT
தீபாவளியன்று ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணத்தை அறிந்து கெள்ளலாம்.
கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சந்நிதித் தெருவில் பிரம்மச்சாரி ஒருவர் இருந்தார். ஸ்ரீசாரங்கபாணி பெருமாளிடம் அதீத பக்தி கொண்டவர் இவர். தினமும் ஆராவமுதனை சேவிப்பதுடன், சதாசர்வ காலமும் அவரையே சிந்தையில வைத்து ஆராதித்து வந்தார்.

வயதாகி, உடல் தளர்ந்த நிலையிலும் ஸ்ரீசாரங்கபாணியை தரிசிப்பதை அந்த பிரம்மச்சாரி விடாமல் தொடர்ந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் ‘சுவாமி, தாங்கள் இப்படித் தனியாக இருக்கிறீர்களே... கடைசி காலத்தில் உங்களுக்கு அந்திமக் கிரியைகளை யார் செய்வார்கள்? என்று கேட்டனர். அப்போதும் ‘என் ஆராவமுதன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். அவன் தான் எனக்கு குழந்தை’ என்றார் அவர்.

ஒரு தீபாவளி தினத்தில் இறைவனடி சேர்ந்தார் அந்த பிரம்மச்சாரி. ‘தீபாவளி புண்ணிய நாளில், துக்கம் அனுஷ்டிக்க முடியுமா? என்ற எண்ணத்தில் அக்கம் பக்கத்தவர்கள் அவர் வீட்டுக்குச் செல்லவோ, எதுவும் செய்யவோ முற்படவில்லை. சற்று நேரத்தில் அழகான இளைஞன் ஒருவன். பிரம்மச்சாரியின் வீட்டுக்கு வந்தான்.

அவரது உடலைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு அழுதவன், ஆக வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்து முடித்தான். இதைக்கண்டு அக்கம் பக்கத்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் சாப்பிடுவதற்காக அவனை அழைக்கச் சென்ற போது அந்த இளைஞன் மாயமாக மறைந்தான்!

மறுநாள் ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு அருள் வந்தது. ‘சந்நிதித் தெருவில் இருந்த பிரச்சச்சாரிக்கு அந்திம கிரியைகளைச் செய்தது சாட்சாத் ஸ்ரீஆராவமுதனே! என்றார் அவர்.

அன்று முதல்.. தீபாவளித் திருநாளில், ஸ்ரீசாரங்கபாணியின் திருக்கரங்களில் தர்ப்பை பவித்ரம் கொடுத்து, சிராத்த சமையல் செய்து வைணவர்களுக்கு அன்னம் பாலிப்பது வழக்கமாக உள்ளது.

Tags:    

Similar News