ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு காட்சி

Published On 2018-07-28 05:30 GMT   |   Update On 2018-07-28 05:30 GMT
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 25-ந்தேதி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை நடந்தது. மதியம் 12.05 மணிக்கு மேல் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதிஅம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 2.45 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார்.

அப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்டவற்றை சப்பரத்தில் போட்டனர். பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 5.14 மணிக்கு சிவபெருமான், கோமதிஅம்பாளுக்கு ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘சங்கரா, நாராயணா‘ என்று விண்ணதிர பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசு காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதிஅம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News