ஆன்மிகம்

திருவானைக்காவலில் பஞ்ச பூத சாந்தி யாகம்

Published On 2018-04-23 05:52 GMT   |   Update On 2018-04-23 05:52 GMT
நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பஞ்ச பூத சாந்தி யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சபூத மகா சாந்தி யாக குழு சார்பில், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், சூறாவளி, அதீத வெப்பம் போன்ற இயற்கை தாக்கத்தில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் நலமாக வாழ பஞ்ச பூத மகா சாந்தி யாகம் பஞ்சபூத தலங்களில் நடைபெற்று வருகிறது. முதல் யாகம் அக்னி தலமான திருவண்ணாமலையிலும், இரண்டாம் யாகம் ஆகாய தலமான சிதம்பரத்திலும் நடைபெற்றது.

அதன்படி 3-வது யாகம் நீர் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் 1,008 சிவத் தொண்டர்கள், ஆன்மிக அன்பர்கள் ஒரே நேரத்தில் 1,008 முறை பஞ்சாட்சரம் மந்திரம் ஓத தொடர்ந்து 5 மணி நேரம் மகா சாந்தி யாகம் நடைபெற்றது.

பின்னர் 27 நட்சத்திர கன்னிப் பெண்களின் தீப, தூப, மலரஞ்சலி நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அதிலிருந்த புனித நீரால் ஜம்பு கேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திருவானைக்கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, அறநிலையத்துறை அதிகாரிகள், சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

யாகத்தையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதற்கானஏற்பாடுகளை பஞ்சபூத மகா சாந்தி யாகக்குழு பெருமாள்சுவாமிகள், பொதுச்செயலாளர் இதயக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 4-வது யாகம் வாயு தலமான காளகஸ்தியிலும், 5-வது யாகம் மண் தலமான காஞ்சீபுரத்திலும், 48 நாட்கள் இடைவெளியில் நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News