ஆன்மிகம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது

Published On 2018-04-19 03:49 GMT   |   Update On 2018-04-19 03:49 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மீது மூலவர் பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மன் கோவில் இருந்தது. இந்த கோவிலில் இருந்த மூலவர் சிலைகள் மன்னர் திப்புசுல்தான் காலத்தில் அகற்றப்பட்டன. அதன்பிறகு தற்போது கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது.

அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் கேடயத்தில் பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மன் உள்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது. இத்திருவிழாவில் நாள்தோறும் சிங்கம், அன்னம் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 27-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் பூப்பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 28-ந் தேதி தேரோட்டமும், 29-ந் தேதி தீர்த்தவாரியும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்று சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News