ஆன்மிகம்
கோவிலில் உள்ள தங்கக்கொடிமரத்தை தண்ணீரால் சுத்தம் செய்தபோது எடுத்தபடம்.

திருப்பதி யுகாதி பண்டிகையை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2018-03-14 03:22 GMT   |   Update On 2018-03-14 03:22 GMT
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதனால், 6 மணிநேரம் தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய விழாக்களை முன்னிட்டு முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

இந்தநிலையில் ஏழுமலையான் கோவிலில் 18-ந்தேதி யுகாதி பண்டிகை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று காலை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் கோவிலின் பிரதான நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டது.

கோவிலை சுத்தம் செய்யும்போது, மூலவர் ஏழுமலையான் மீது அசுத்தத் தண்ணீர் படாமல் இருப்பதற்காக விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு, மூலவர் சன்னதியில் இருந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. மூலவர் சன்னதியை குறிப்பிட்ட அர்ச்சகர்கள் மட்டுமே சுத்தம் செய்வார்கள். அதன்படி அர்ச்சகர்கள் மட்டுமே மூலவர் சன்னதியை சுத்தம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து விமான வெங்கடாஜலபதி, ராமுலவாரி மேடை, தங்க வாசல், வரதராஜசாமி சன்னதி, வகுளமாதாதேவி சன்னதி, சந்தனம் அரைக்கும் அறை, பாஷ்யங்கார்ல சன்னதி, லட்சுமி நரசிம்மசுவாமி சன்னதி, விஸ்வசேனர் சன்னதி, தங்கக்கொடி மரம், பலி பீடம், கோவிலின் மாடங்கள், தூண்கள், மகா துவாரம், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன. தூண்கள், மாடங்கள் ஆகியவற்றில் மஞ்சள், சந்தனம், குங்குமம், பச்சை கற்பூரம் உள்ளிட்ட சுகந்த திரவியம் பூசப்பட்டது.

இதையடுத்து மூலவர் மீது போர்த்தப்பட்ட விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டது. பின்னர் தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் பூஜை பொருட்களை தங்களின் தலையில் சுமந்தபடி மூலவர் சன்னதிக்கு ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தனர். அந்தப் பூஜை பொருட்களால் மூலவருக்கு முற்பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 12 மணிவரை நைவேத்தியம், சிறப்புப்பூஜைகளை செய்தனர்.

அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் 12 மணிக்கு கோவிலில் பிரதான கதவுகள் திறக்கப்பட்டு இலவச தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் டிக்கெட் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் நேற்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேரம் தரிசனமும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை மற்றும் வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது.
Tags:    

Similar News