ஆன்மிகம்
சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்ததையும், திரளான பக்தர்கள் தரிசித்ததையும் காணலாம்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா

Published On 2018-03-01 03:56 GMT   |   Update On 2018-03-01 03:56 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் வாகன பவனியும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்தகோவிலில் 574-வது திருக்கல்யாண விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி முன்னதாக காலை 7 மணிக்கு பறக்கையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு பூப்புனித நீராட்டுவிழா நடந்தது. அம்மன் மணப்பெண் கோலத்தில் ஆசிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளதாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனையும் அமர வைத்தனர்.

தாணுமாலயசாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேதமந்திரங்கள் முழங்க, மணி ஓசை ஒலிக்க பெண்கள் குலவையிட அறம்வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது. திருமணத்திற்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் (பெருமாள்) இருந்தார்.

திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் சாமியும் அம்மனும் பக்தர்களுக்கு காட்சி தர எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் இறுதி நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மன் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News