ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா தொடங்கியது

Published On 2018-02-21 03:11 GMT   |   Update On 2018-02-21 03:11 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டு இக்கோவில் அமைய பெற்றுள்ளது. ஏனெனில் இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடிமரம், 5 தீர்த்தம், 5 தேர் என அனைத்தும் பஞ்சபூதங்களான 5-ஐ மையமாக கொண்டு அமைந்துள்ளது.

இதுதவிர 18 அடி ஆழத்தில் உள்ள ஆழத்துவிநாயகர் சன்னதி, சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்களை குறிக்கும் வகையில் 28 லிங்கத்தை இந்த தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வரலாறு என கோவில் பெருமையை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இப்படி பிரசித்தி பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு முன்னதாக கோவில் காவல் தெய்வமான செல்லியம்மனுக்கு திருவிழாவும், அதனை தொடர்ந்து ஆழத்து விநாயகருக்கு 10 நாட்கள் திருவிழாவும் கொண்டாடப்படும்.

அதன்படி, இந்தாண்டு செல்லியம்மனுக்கும், ஆழத்து விநாயகருக்கும் திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து விருத்தகிரீஸ்வரருக்கு மாசிமக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோவிலில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க மாசிமக பெருவிழா கொடியேற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம்நவசிவாய, சிவாய நம என பக்தி கோஷங்களை எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் வருகிற 25-ந் தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ந் தேதி தேரோட்டமும், மார்ச் 1-ந் தேதி மாசிமக உற்சவமும், 2-ந் தேதி தெப்ப திருவிழாவும், 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் ராஜாசரவணக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News