ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் வலம் வருவது எப்போது?

Published On 2018-02-17 03:16 GMT   |   Update On 2018-02-17 03:16 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் சுற்றி வருவது எப்போது? என்று பக்தர்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2007-ம் ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் செய்யப்பட்டு, செப்டம்பர் மாதம் 16-ந்தேதி முதல் கோவிலில் வலம் வரத்தொடங்கியது. இதனையடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகவும், அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி தலைவர்களின் பிறந்தநாளில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

இதன் மூலம் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வந்தது. அதே சமயம் ஆண்டுக்கு ஒரு முறை பக்தர்கள் கட்டணம் இல்லாத தங்கத் தேர் இழுத்து தரிசனம் செய்யும் நிகழ்வும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் தங்கத்தேரில் உள்ள சில பொம்மைகள் சேதம் ஏற்பட்டதால், கோவில் நிர்வாகம் தேரை சீரமைக்க முடிவு செய்தது. அதன்படி திருக்கோவிலுக்குள் தங்கத் தேர் வலம் வருவது நிறுத்தப்பட்டது. மேலும் தேரை சீரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் கமிஷனர் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக கோவிலில் தங்கத்தேர் இயக்கம் இல்லாத நிலை இருந்து வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டியும், அரசியல் கட்சியினரும் தங்கத்தேர் வலம் வருவது எப்போது? என்று மிகுந்த எதிர்ப்புடன் உள்ளனர். தங்கத்தேர் இயங்காததால் கோவிலின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தங்கத்தேர் வலம் வருவதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News