ஆன்மிகம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 23-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-01-13 04:39 GMT   |   Update On 2018-01-13 04:39 GMT
தமிழ்நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற சிவாலயங்களில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை சுவாமி சந்திரசேகர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலம், காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றம் ஆகியவை நடக்கிறது. பின்னர் விநாயகர் வீதிஉலா, உச்சிகால பூஜை, இரவு சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதிஉலா ஆகியவை நடக்கிறது.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி வரை 10 நாட்கள் விழா தொடர்ந்து நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8.30 மணிக்கு விநாயகர் வீதிஉலா, மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை கஜவாகனம், அன்னவாகனம், கைலாயபர்வதம் வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், வெற்றிவேர் சப்பரம், சட்டங்கால் சப்பரம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

9-ம் திருவிழாவான 31-ந்தேதி காலை 6.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 1-ந்தேதி காலை பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவு 10 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நெல்லை, நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
Tags:    

Similar News