ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்

Published On 2018-01-02 05:18 GMT   |   Update On 2018-01-02 05:18 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

தமிழ் மாதங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரிய நட்சத்திரமாகும். அந்த நாள் சிவபெருமான் நடராஜராக ஆனந்த நடனம் புரியும் நன்னாளாகும். அந்த நாளில் நடராஜர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாக்களின்போது மூலவராகிய நடராஜ மூர்த்தியே, உற்சவராக புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன விழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவ காமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும் நடந்தது.

9-வது நாள் விழாவான நேற்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சித்சபையில் இருந்து கனகசபைக்கு மூலவராகிய சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜமூர்த்தி கொண்டு வரப்பட்டனர். அங்கு சிவகாமசுந்தரிக்கும், நடராஜருக்கும் பால், தேன் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரியும், நடராஜமூர்த்தியும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள் மற்றும் வெளிபிரகாரத்தில் வலம்வந்து, காலை 6.30 மணியளவில் கிழக்குரத வீதியில் தேர் நிலையில் உள்ள மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் அலங்கரிக்கபட்டு தயார் நிலையில் இருந்த 5 தேர்களில் முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் சுப்பிரமணியர், 3-வது தேரில் நடராஜர், 4-வது தேரில் சிவகாமசுந்தரி, 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.

கைலாய வாத்தியங்களின் இசை முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 7.30 மணிக்கு விநாயகர் தேரும், 7.40 மணிக்கு சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 8 மணிக்கு ஆடலரசர் நடராஜர் தேரை சிவ சிவா, ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அந்த தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது.

அதன் பின்னர் 8.15 மணியளவில் சிவகாமசுந்தரி அம்பாள் தேரையும், 8.30 மணிக்கு சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் இழுத்தனர். பஞ்சமூர்த்திகளின் தேர் மேற்குரதவீதி, கஞ்சித்தொட்டி முனையை வந்தடைந்தவுடன் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேருக்கு மீனவர்கள் சமுதாயம் சார்பில் பாரம்பரிய முறைப்படி, மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் படைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, மாலையில் கீழக்கு வீதியில் தேர்கள் நிலையை வந்தடைந்தன.

சிகர நிகழ்ச்சியும், 10-ம் நாள் திருவிழாவுமான ஆருத்ரா தரிசனம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும்.

பின்னர் சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சி நடந்து, 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News