ஆன்மிகம்
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

தென்காசியில் அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு

Published On 2017-12-16 05:19 GMT   |   Update On 2017-12-16 05:19 GMT
செங்கோட்டை, தென்காசி வந்த அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மண்டல பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்களுடன் ஒரு தங்க வாளும் உண்டு. இந்த ஆபரண பெட்டி நேற்று காலை கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டு அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கியும், கருப்ப சுவாமிக்கு வெள்ளி அங்கியும் இதில் உண்டு. இவற்றையும், தங்க வாளையும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தரிசனம் செய்தனர். இந்த தங்க வாள் ஐயப்பன் உபயோகித்ததாகவும், இடத்திற்கு இடம் இந்த வாள் எடை வேறுபடும் என்றும் நம்பப்படுகிறது.


ஆபரண பெட்டியில் உள்ள கருப்ப சுவாமியின் வெள்ளி அங்கியை படத்தில் காணலாம்.

நேற்று காலை 10 மணிக்கு புனலூரில் இருந்து செண்டை மேளம் முழங்க, பட்டத்து யானை முன்னால் வர பக்தர்கள் ஊர்வலமாக ஆபரண பெட்டி புறப்பட்டது. கேரள மாநில போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆபரண பெட்டி தென்மலை, ஆரியங்காவு வழியாக செங்கோட்டைக்கு வந்தது. வழிநெடுகிலும் பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க, செங்கோட்டை பஸ்நிலையம் முன்பு அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் முன்பு வந்து நின்றது.

அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் ஆபரண பெட்டிக்கு பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஆபரண பெட்டி அங்கிருந்து தென்காசிக்கு புறப்பட்டுச் சென்றது.


ஆபரண பெட்டியில் உள்ள ஐயப்பனின் தங்க அங்கி மற்றும் தங்க வாளை படத்தில் காணலாம்.

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு மதியம் 2 மணிக்கு ஆபரண பெட்டி வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் அதிர் வேட்டு மற்றும் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து ஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர். 3.12 மணிக்கு ஆபரண பெட்டி தென்காசியில் இருந்து புறப்பட்டு பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு மாலையில் சென்றடைந்தது. அங்கு பெண் குழந்தைகள் கைகளில் விளக்கு ஏந்தி ஆபரண பெட்டிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவிலில் ஆபரண பெட்டி வைக்கப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. மூன்றாம் திருநாள் முதல் ஒன்பதாம் திருநாள் வரை சப்பர வீதியுலா மற்றும் கருப்பன் துள்ளல் நடைபெறுகிறது. ஒன்பதாம் திருநாளான 24-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 25-ந் தேதி ஆராட்டு நடக்கிறது.
Tags:    

Similar News