ஆன்மிகம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடை திறப்பு

Published On 2017-11-20 04:26 GMT   |   Update On 2017-11-20 04:26 GMT
ஐயப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பகல் முழுவதும் நடை திறந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

பொதுவாக கார்த்திகை மாதம் பிறந்தவுடன் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம். அவ்வாறு விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இதனால் அவர்களின் வசதிக்காக அடுத்த ஆண்டு தைப்பூசத்திருநாளான ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை பகல் முழுவதும் நடை திறந்து இருக்கும்.

இதையொட்டி கார்த்திகை மாதத்தில் தினமும் அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரையிலும், மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரையிலும், தை மாதத்தில்(தைப்பூசம் வரை) காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரையிலும் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி கோவிலில் வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தைப்பூசத்திருவிழாவில் விரதம் இருந்து மாலை அணிந்து பழனிக்கு நடந்து செல்ல உள்ள பக்தர்களின் தரிசனத்திற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு சு.ப.அருணாச்சலம் செட்டியார், அரிமளம் நா.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News