ஆன்மிகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கொடியேற்றத்துக்கு பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்

செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-11-03 03:52 GMT   |   Update On 2017-11-03 03:53 GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பூவனநாதர், செண்பகவல்லி அம்மன், பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் கோவில் சேர்ந்தது.

தொடர்ந்து பூவனநாத சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் நந்தியம் பெருமாள், பலி பீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தைச் சுற்றிலும் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவில் புஷ்ப சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது. 9-ம் திருநாளான வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. 12-ம் திருநாளான 13-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
Tags:    

Similar News