ஆன்மிகம்

ஆதிசங்கரருக்கு அருளிய முருகப்பெருமான்

Published On 2017-10-21 08:41 GMT   |   Update On 2017-10-21 08:41 GMT
திருச்செந்தூர் கோவிலில் ஆதிசங்கரர் உருவச்சிலை பாலசுப்பிரமணியருக்கு எதிரில் மகா மண்டபத்தில் உண்டியல் பெட்டிக்குத் தென்புறமுள்ள தூணில் அமைந்துள்ளது.
கேரள மாநிலத்தில் காலடி என்னும் ஊரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அவர் ஊரில் ஆறு வெகு தூரத்தில் இருந்தது. தன் தாயினால் அவ்வளவு தூரம் நடந்து சென்று குளிக்க இயலாது எனக் கண்ட சங்கரர் இறைவனை வேண்டி அந்த ஆற்றின் போக்கை மாற்றி தன் வீட்டின் அருகில் ஓடச் செய்தார். அற்புத சித்தர். பறக்கும் ஆற்றல் படைத்தவர்.

வடநாட்டிற்குச் சென்றிருந்த போது அபிநவ குப்தன் என்பவன் அவர் மீது பகை கொண்டான். அபிசார யாகம் செய்தான். ஆதிசங்கரருக்குக் காச நோயைப் பற்றச் செய்தான். நோய் பற்றவே சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் ஆதிசங்கரர் கனவில் தோன்றி ‘‘சூரனைக் கொன்ற வீரன் வாழும் திருச்செந்தூர் சென்றால் உம் நோய் நீங்கும்’’ என்றார்.



ஆகாய வழியாகத் திருச்செந்தூரை வந்தடைந்தார் ஆதிசங்கரர். செந்தூர்க்கோவில் குகைக்குள் காட்சி அளித்தது. குகைக்குள் இருந்த குமரனை நோக்கி நடந்தார். ஆறுமுகப் பெருமான் ஒளிமயமாக விளங்கினார். பாலசுப்பிரமணியர் பாதங்களில் பாம்பு (ஆதிசேடன்) பூஜை செய்வதைக் கண்டு மகிழ்ந்தார். சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூலைப் பாடினார். புஜங்கம் என்றால் பாம்பு. தோளால் ஊர்வது.

இக்கோவிலிலே பன்னீர் மரத்து இலையில் வைத்து வழங்கப்படும் விபூதியின் மகிமையை உணர்ந்தார். இலை விபூதியை உட்கொண்டார். காசநோய் மறைந்தது. இலை விபூதியின் பெருமையைப் பாடினார்.

ஆதிசங்கரர் உருவச்சிலை பாலசுப்பிரமணியருக்கு எதிரில் மகா மண்டபத்தில் உண்டியல் பெட்டிக்குத் தென்புறமுள்ள தூணில் அமைந்துள்ளது. அவர் பாடிய முப்பத்து மூன்று வடமொழிப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சலவைக் கல்லில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவரில் அவற்றை இன்றும் காணலாம்.

Tags:    

Similar News