ஆன்மிகம்
காவிரி மகாபுஷ்கர விழாவையொட்டி காவிரி அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட காட்சி

கும்பகோணத்தில் காவிரி மகா புஷ்கர விழா: திரளான பக்தர்கள் புனித நீராடினர்

Published On 2017-09-20 02:54 GMT   |   Update On 2017-09-20 02:54 GMT
கும்பகோணத்தில் காவிரி மகா புஷ்கர விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
காவிரி மகா புஷ்கர விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு முதல் வங்க கடலில் கலக்கும் பூம்புகார் வரை மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. கும்ப கோணத்தில் நேற்று காவிரி மகா புஷ்கர விழா தென்பாரத மகாமக கும்பமேளா அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கும்ப கோணம் பகவத் படித்துறை, டபீர் படித்துறை, சக்கரபடித்துறை ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

காவிரி மகா புஷ்கரத்தை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கீழவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் காவிரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலை நேற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ரத ஊர்வலத்தை நரசிங்கன்பேட்டை வீரராகவசுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் பகவத் படித்துறையில் நிறைவடைந்தது. அங்கு காய்கறிகளால் காவிரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காவிரியில் புனித நீராட வந்த பக்தர்கள் காவிரி அம்மனை வழிபட்டு சென்றனர். காவிரி மகா புஷ்கரத்தையொட்டி நேற்று மாலை காவிரி ஆற்றில் மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

காவிரி மகா புஷ்கர விழா மற்றும் மகாளய அமாவாசை காரணமாக நேற்று கும்பகோணத்தில் காவிரி ஆற்றின் படித்துறைகளில் புனித நீராட வந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. டபீர் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
Tags:    

Similar News