ஆன்மிகம்
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2017-07-27 04:16 GMT   |   Update On 2017-07-27 04:16 GMT
200 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தாயார் விசாலாட்சி தனிச்சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு ஆடிப்பூரத்தையொட்டி 200 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது. தேர் பழுதானதை தொடர்ந்து நீண்டகாலம் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. கடந்த ஆண்டு உபயதாரர்கள் உதவியால் ரூ.22 லட்சம் செலவில் புதிதாக தேர் செய்யப்பட்டது.

ஆடிப்பூரத்தையொட்டி 200 வருடங்களுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் அம்பாள் சேஷ வாகனம், கிளி, காமதேனு, ரிஷபம், அன்னம், யாளி, தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நேற்று காலை 6.30 மணியளவில் விசாலாட்சி அம்பாள் தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேரோட்டத்தில் திருப்பைஞ்சீலி, மூவராயன்பாளையம், ஈச்சம்பட்டி, வாழ்மால்பாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் அன்னகாமுமுத்து, சடையன், அ.தி.மு.க. ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலற்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பானகம், நீர்மோர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜர் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடக்கிறது. நாளை மறுதினம் விடையாற்றி வைபவம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News