ஆன்மிகம்

புதுவை கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா நாளை நடக்கிறது

Published On 2017-07-26 09:32 GMT   |   Update On 2017-07-26 09:32 GMT
புதுவையில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ராகு-கேது பெயர்ச்சி விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
நவக்கிரகங்களில் “சாயா கிரகங்கள்” ( நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படும் ராகு-கேதுவும் மட்டும் பின்னோக்கி இயங்குகின்றன.பின்னோக்கி செல்லும் இந்த கிரகங்கள் தான் நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கின்றன.நாளை (வியாழக்கிழமை)

மதியம் 12.48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

புதுவை அருகே உள்ள மொரட்டாண்டியில் விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக கோவில் உள்ளது. இங்குள்ள 12 அடி உயர ராகு பகவான், மற்றும் கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், தொடர்ந்து காலை 8 மணிக்கு நட்சத்திர, ராசி பரிஹார ஹோமங்களும், காலை 10 மணிக்கு பூர்ணாஹூதியும், 12.48 மணிக்கு ராகு-கேது பகவானுக்கு பஞ்ச லோக ஆபரண கவசம் சாற்றி

தீபாராதனையும் கோலாகலமாக நடைபெறுகிறது.

பூவரசன்குப்பம் சிவலோகநாயகி சமேத ஸ்ரீ நாகேஸ்வர கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள சந்திரலேகா சிம்மிகை சமேத ராகு பகவான் பெயர்ச்சியடைவதை முன்னிட்டு சிறப்பு பரிகார ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்று காலை 5 மணி முதல் 6 மணி வரை சிறப்பு அபிஷேகம், 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை லட்சார்ச்சனையும், பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் பாலாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 28-ந் தேதி காலை 7 மணிக்கு மகா நவசண்டி ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகிறார்கள்.

புதுவை இடையார்பாளையம் ஞானமேடு சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் உள்ள அபயராகு, அனுக்கிரக கேது பகவானுக்கு விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடக்கிறது.தொடர்ந்து பரிஹார ஹோமங்கள், அன்னதானம் , விசேஷ பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் தங்கள் கைப்படவே ராகு-கேது பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதே போல் புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், காளத்தீஸ்வரர்,வில்லியனூர் திருக்காமீஸ்வரர், பாகூர் மூலநாதர், உருளையன்பேட்டை சஞ்சய்காந்திநகர் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நவக்கிரக சன்னதியில் ராகு-கேது பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
Tags:    

Similar News