ஆன்மிகம்

வெற்றி வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2017-07-05 04:38 GMT   |   Update On 2017-07-05 04:38 GMT
ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் புனரமைக்கப்பட்டு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திருப்பணிகள் செய்யப்பட்டு 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கோவில் முற்றிலும் புனரமைக்கப்பட்டு கோபுர விமானங்கள், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று(புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதையொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் கும்பாபிஷேகவிழா தொடங்கியது.

கடந்த 29-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதியாகம், தனபூஜை, கோபூஜையும், 30-ந்தேதி நவகோள் வேள்வியும் நடந்தது. 2-ந் தேதி காலை ருத்ரஜெபம், முளைப்பாலிகை மற்றும் தீர்த்தகலச ஊர்வலம் மற்றும் முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் 2-ம் கால மற்றும் 3-ம் கால யாக பூஜைகளும், நேற்று 4-ம் கால மற்றும் 5-ம் கால யாக பூஜையும், இரவு மூலஸ்தான யந்திரா ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று(புதன்கிழமை) காலை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, 8.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதலும், காலை 9.30 மணிக்கு விநாயகர், மூலவர், வள்ளி தேவசேனா, மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு வெற்றி வேலாயுதசுவாமி மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ.சரவண மாணிக்கவாசக சாமிகள் நடத்துகிறார். அதைத்தொடர்ந்து சர்வ தரிசனம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள், விழாக் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News