ஆன்மிகம்
கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டதையும், கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்களையும் படத்தில் காணலாம்.

சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-06-15 05:34 GMT   |   Update On 2017-06-15 05:34 GMT
சோழவந்தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சோழவந்தான் அருகே வைகை கரையோரம் குரு ஸ்தலமாக விளங்கும் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிய 5 நிலை ராஜ கோபுரம் கட்டும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்கான திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 12-ந்தேதி மாலை 63 பட்டாச்சாரியார்கள் தலைமையில் 21 யாக சாலை குண்டங்கள் தொடங்கப்பட்டன. யாக சாலையில் வேத திவ்ய பிரபந்த பாராயணங்கள் ஓதப்பட்டு தொடர்ந்து 2-ம், 3-ம் கால யாக பூஜைகள் நடந்தன.

4-ம் கால யாக பூஜைகள் நேற்று அதிகாலை தொடங்கின. பின்னர் வேத விற்பனர்கள் தலையில் புனித நீர் கலசங்களை சுமந்தபடி கோவில் உள் பிரகாரங்களில் வலம் வந்தனர். அதன் பின்னர் காலை 6.43 மணியளவில் 63 அடி உயர புதிய ஐந்து நிலை ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய கொடிமரம், பெருமாள் சன்னதி மற்றும் செண்பக வல்லி தாயார் சன்னதி விமானங்கள், சக்கரத்தாழ்வார், குருபகவான் சன்னதி சால கோபுரங்கள் மற்றும் கருடாழ்வார் விமானம் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் புதிய ராஜகோபுர உபயதாரர் மூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லம்மாள், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, இணை ஆணையர் பச்சையப்பன், தக்கார் ராஜசேகரன், செயல் அலுவலர் (பொறுப்பு) சக்கரையம்மாள், முன்னாள் ஊராட்சி தலைவர் பசும்பொன் மாறன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக 2-ம் கால யாக பூஜையில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News