ஆன்மிகம்

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: மேலும் 3 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

Published On 2017-05-29 09:44 GMT   |   Update On 2017-05-29 09:44 GMT
திருப்பதியில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடந்த 26-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆகிறது.

கோடைவிடுமுறையைத் தொடர்ந்து திருப்பதியில் கடந்த 15 நாள்களாக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், பக்தர்கள் பல மணிநேரம் அறைகளில் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்து செல்கின்றனர்.

ஏழுமலையானை சனிக்கிழமை 1,01,107 பக்தர்கள் தரிசித்தனர். இவர்களில் 66,776 பக்தர்கள் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்தினர்.

நேற்று 93,367 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 66,776 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். இன்றும் கூட்டம் அதிகளவில் உள்ளது.

திருப்பதியில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடந்த 26-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.

இந்நிலையில், இதனை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்துள்ளதாக தேவஸ் தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜூ தெரிவித்தார். அதன்படி செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நாள்களில் புரோட்டோகால் வி.ஐ.பி. களுக்கு மட்டுமே தரிசனம் வழங்கப்படும்.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனர். அதன்படி நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.2.63 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Tags:    

Similar News