ஆன்மிகம்
ராமநத்தம் அருகே டி.ஏந்தல் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

ராமநத்தம் அருகே செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2017-05-05 07:52 GMT   |   Update On 2017-05-05 07:52 GMT
ராமநத்தம் அடுத்துள்ள டி.ஏந்தல் கிராமத்தில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராமநத்தம் அடுத்துள்ள டி.ஏந்தல் கிராமத்தில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது.

விழாவில் 4-ம் நாள் திருவிழாவில் பெண்கள் ஊரணி பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, செல்லியம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கோவில் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

விழாவில் நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News