ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா

Published On 2017-04-22 03:42 GMT   |   Update On 2017-04-22 03:42 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலின் சித்திரை தேரோட்டம் கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 13-ம் திருநாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று பகல் 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்திற்கு வந்தடைந்தார்.

இரவு 8.45 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் அம்மன் வீதியுலா வந்து மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை, பய பக்தியுடன் வழிபட்டனர்.



ஒவ்வொரு ஆண்டும் தெப்பத்திருவிழா நாளில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால், தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் தெப்ப உற்சவம் நடைபெறாமல், அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதனால் தெப்ப உற்சவத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தெப்ப திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Similar News