ஆன்மிகம்

விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நாளை நடக்கிறது

Published On 2017-04-13 06:11 GMT   |   Update On 2017-04-13 06:12 GMT
விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு அடுத்தபடியாக விஷூ பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப ஐஸ்வர்யத்தின் அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி வீடுகளிலும், கோவில்களிலும் விளைந்த காய்கறிகள், பழங்கள் மங்களகரமான ஐஸ்வர்யம் தரும் கனிக்கொன்றை பூக்கள் படைத்து வழிபடுவார்கள் கேரள மக்கள்.

அவ்வாறு வழிபடும்போது சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். விஷூ பண்டிகை அன்று கோவிலில் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை பூசாரிகள் வழங்குவார்கள்.

பங்குனி உத்திரம் மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டு தொடர் பூஜைகள் நடைபெற்று வருகிறது. வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் படிபூஜை, உதயஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும் தினசரி நடக்கிறது. விஷூ பண்டிகையையொட்டி முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.



தொடர்ந்து வழக்கமான பூஜைகளும், சிறப்பு விஷூ பூஜைகளும் நடைபெறும். பின்னர் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் வாழ்நாள் முழுவதும் செல்வச்செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஐதீகத்தின் படி, பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்கள். விஷூ தினத்தில் கைநீட்டம் பெறுவதை ஐஸ்வர்யமாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இதனால் அன்றைய தினம் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக பல்வேறு ஊர்களில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையை போன்று கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் விஷூ பண்டிகை சிறப்பு பூஜை-கைநீட்டம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.

Similar News