ஆன்மிகம்
சிவன்மலை கோவிலின் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம் வைக்கப் பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சிவன்மலை கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம் வைத்து பூஜை

Published On 2017-03-29 03:07 GMT   |   Update On 2017-03-29 03:07 GMT
காங்கேயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் ருத்ராட்சம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தரின் கனவில், சிவன்மலை ஆண்டவர் வந்து குறிப்பிடும் பொருளை, சம்பந்தப்பட்ட பக்தர் கொண்டு வந்து கோவிலில் கொடுப்பார்.

உடனே கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருளை ஏற்றுக்கொண்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்யப்படும். இது மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும்.

அந்தவகையில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இதற்கு முன்பு தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ந் தேதி முதல் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது.



இந்த நிலையில் மஞ்சள், குங்குமம் அகற்றப்பட்டு நேற்று முதல் ஒரு துணியில் 108 ருத்ராட்சம் வைத்து கட்டி ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை அண்ணாமலைபுரத்தை சேர்ந்த எஸ்.சங்கர் சுப்பிரமணியம் என்ற பக்தர் வைத்துள்ளார். இவர் சென்னையில் இயற்கை மருந்து பொருட்கள் தயாரித்து வருகிறார்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ருத்ராட்சம் வைத்து உள்ளதன் மூலம் ஏற்படும் மாற்றம் இனிமேல் தான் தெரிய வரும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இது பற்றி சங்கர் சுப்பிரமணியம் கூறும்போது ‘முருகப்பெருமான் என் கனவில் வந்து சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்றார். ஆனால் இந்த கோவில் குறித்து எனக்கு தெரியாததால் என் உறவினர் ஒருவரின் உதவியுடன் இங்கு வந்தேன் என்றார்.

Similar News