ஆன்மிகம்

அமாவாசையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2017-03-28 04:41 GMT   |   Update On 2017-03-28 04:41 GMT
பண்ருட்டி திருவதிகையில் உள்ள சரநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
பண்ருட்டி திருவதிகையில் உள்ள சரநாராயண பெருமாள் கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பங்குனி மாத அமாவாசையான நேற்று, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் உற்சவரான சரநாராயண பெருமாளுக்கு பால், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவர் கோதண்டராமர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தேன், சந்தனம், இளநீர், தயிர் உள்பட 27 விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Similar News