ஆன்மிகம்

பழனி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா 3-ந்தேதி தொடங்குகிறது

Published On 2017-03-27 07:47 GMT   |   Update On 2017-03-27 07:47 GMT
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி தினமும் காலை 8 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் முத்துக்குமார சுவாமி, வள்ளி- தெய்வநாயகி அம்மனுடன் திருவுலா காட்சி நடக்கிறது.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவில் வருகிற 8-ந் தேதி இரவு 6.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு மேல் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் திருவுலா காட்சியும் நடைபெறுகிறது.


பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.


9-ந் தேதி பங்குனி உத்திரத் திருநாளில், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 8.55 மணிக்கு திரு ஆவினன்குடி கோவிலில் தந்த பல்லக்கில் எழுந்தருளலும், மாலை 4.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

10-ந் தேதி இரவு 9 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கிரி வீதியில் சுவாமி உலா வருதலும், 11-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை 7.20 மணிக்கு திரு ஆவினன்குடி கோவிலில் அபிஷேக ஆராதனை, 10.45 மணிக்கு சாந்து மண்டகப்படி, இரவு 11 மணிக்கு திருவிழா நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி மலைக்கோவிலில் பக்தர்கள் வசதியாக சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடும் கோடை வெப்பம் உள்ளதால் பக்தர்கள் மலைக்கோவிலில் தீர்த்தக் காவடியுடன் அமர நிழற்பந்தல் அமைக்கப்பட உள்ளது. கட்டண தரிசனம், கட்டளை தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றிற்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களும் அடிவாரம் குட முழுக்கு நினைவரங்கில் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News