ஆன்மிகம்

தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2017-02-28 06:03 GMT   |   Update On 2017-02-28 06:03 GMT
தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டிவனம் அருகே தென்பசியார் கிராமத்தில் பிரசித்திபெற்ற சுயம்பு நாகஅங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான மாசிப்பெருவிழா கடந்த 24-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மயானக்கொள்ளை திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு கன்னிமார் கோவி லில்இருந்து அம்மன் கரக வீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் அம்மன் வீதிஉலா மற்றும் நாடகம் நடைபெற்றது. விழாவில் தென்பசியார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கெஜலட்சுமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சக்திஉபாசகர் ராம்குமார் அடிகளார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News