ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைப்பு

Published On 2016-12-02 10:03 GMT   |   Update On 2016-12-02 10:04 GMT
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஐயப்பனின் கருவறை ஒரு சதுரமான மாடியின் மையத்தில் நீண்ட சதுர வடிவில் நீளவாக்கில் அமைந்துள்ளது. அந்த நீண்ட சதுரத்தின் மீது கொட்டகை போட்டது போன்று தங்கத்தகடுகள் தட்டையாக இல்லாமல் இரண்டு புறமும் சாய்ப்புல் போல் இருக்கும். இந்தக் கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் முன் பகுதியில் இடது, வலதாக அமைந்த ஓட்டு வீடு போன்ற நுழைவாயில் உள்ளது.

அந்த ஓட்டு வீட்டின் முகப்பும் நீட்டிவிடப் பெற்றுச் சாய்ப்பான ஓட்டு வீடு போல்தான் இருக்கும். ஐயப்பனின் முன்னுள்ள ஓட்டுப் பகுதியில் நின்றால் மட்டுமே வெயில் மழை நம்மீது படாது.

உயரமான ஒரு பெரிய முதல் மாடியில் அமைந்துள்ள கோவிலாக அமைந்திருப்பதால் சரங்குத்தி வந்தவுடனேயே கோவில் நம் கண்ணில் தென்பட்டு, ‘கண்டேன், கண்டேன் உன் திருக்கோவில்’ என்று கூற வைக்கிறது.

இப்போது உள்ள ஐயப்பனின் திருக்கோவில் பழமையானது அல்ல. பழமையான கோவில் இருந்த இடத்தில் எழுப்பப் பெற்ற கோவிலாகும். 1900 ஆம் ஆண்டில் இத்தலத்தில் ஒரு தீவிபத்து ஏற்பட்டது.

எனவே கோவிலைக் கட்ட அரசு விளம்பரம் செய்தது. கோவில் கட்டும் பணியைப் போளச்சிறய்க்கல் கொச்சும்மன் என்னும் ஒப்பந்தக்காரர் ஏற்றார். 1904 இல் கொல்லம் புதுக்குளங்கரை அரண்மனை வளாகத்தில் கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார்.

கொல்லம் காயல்கரையில் கோவில் பகுதிகளை இணைத்ததைத் திருவனந்தபுரம் மன்னர் வந்து பார்வையிட்டதும், அவற்றையெல்லாம் பிரித்துப் படகில் கோட்டயம் கொண்டு சேர்த்தனர்.

அங்கிருந்து சாலை வழியாக முண்டக்காயம் சேர்த்து, மேற்குப் பாறைத் தோட்டம் வழியே தலையில் சுமந்து கட்டிடப் பொருள்களைச் சபரிமலைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.500-க்கும் மேற்பட்டோர் நான்கு மாதங்கள் தலையில் இவற்றைச் சுமந்து வந்து சேர்த்தனர்.

கொச்சும்மனே சபரிமலையில் தங்கியிருந்து கருங்கல் பணிகளையும், மரப்பணிகளையும் முடித்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, கோவில் கட்டும் பொறுப்பை ஆற்றுக்குழி ராமன் பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்தார்.

கொச்சும்மனின் மருமகனின் தலைமையில் இந்த வேலையை முடிக்கச் செய்தார். அவருடைய தலைமையில் 1913 இல் திருக்கோவில் பணிகள் முடிவுற்றன.
1950 இல் இக்கோவில் மீண்டும் நெருப்புக்கு இரையாயிற்று. அதனால் புதுப்பித்துக் கட்டினர். இதனால் கோவில் தொடர்பான பல ஆவணங்கள் அழிந்து விட்டன.

Similar News