ஆன்மிகம்

மகத்துவம் நிறைந்தது மகாமகம் என்று சொல்வது ஏன்?

Published On 2016-10-22 08:26 GMT   |   Update On 2016-10-22 08:26 GMT
பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது. இத்திருநாளில் மகாமக தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.
ஒவ்வொரு வருடமும் வரும் மாசி மகம் விசேஷமானதுதான். இருப்பினும் பன்னிரண்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் மகாமகம் அதி விசேஷமானது.

ஜோதிட ரீதியாக: கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் தினம் பெளர்ணமி வரும். இந்தக் கும்ப மாத பெளர்ணமி திருநாளே மாசிமகம்.ஆனால் கும்ப ராசியில் சூரியன் இருக்க, சிம்மத்தில் சந்திரனுடன் குருபகவானும் இணைந்து திகழும் நாள் மகாமகம் ஆகும். இந்த நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே நிகழும்.

குருவின் ராசிச் சக்கர சஞ்சாரம் சுமார் 12 வருட காலம். ஆதலால், மாசி பெளர்ணமியில் குரு சிம்மத்தில் வரவேண்டுமானால், அதற்கு பன்னிரண்டு வருடங்கள் பிடிக்கும். ஆக, மகாமகமும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே வரும். சில தருணங்களில் 11 வருடங்களிலேயே மகாமகம் வருவது உண்டு. அதை இளைய மாமாமங்கம் என்பார்கள் (இது குறித்த தகவல், இந்த இதழ் சக்தி விகடனில் ‘அருட்களஞ்சியம்’ பகுதியில் இடம் பெற்றுள்ளது).

கோளியல் ரீதியாக : சூரியன், பூமி, சந்திரன், குரு ஆகிய கோள்களுடன் மக நட்சத்திரமும் நேர்க்கோட்டில் இருந்து, பெளர்ணமியோடு கூடிய காலமே மகாமகம். அன்று குரு கிரகம் அதன் துணை கிரகங்களுடன் விண்ணில் ஒளிருவதை தொலைநோக்கி மூலம் காணலாம் என்பார்கள் வானியல் அறிஞர்கள்.

இத்தகு புண்ணிய தினத்தில் நவகன்னிகா நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிப்பதாகவும், பிரம்மாதி தேவர்கள் கும்பகோணத்தில் கூடுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆகவே, இத்திருநாளில் குடந்தை தரிசனமும், மகாமக தீர்த்த நீராடலும் மகத்துவம் வாய்ந்தது.

Similar News