ஆன்மிகம்

கைலாசபுரம் பெருமாள் கோவிலில் நாளை ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2016-09-24 07:27 GMT   |   Update On 2016-09-24 07:27 GMT
திருச்சி கைலாசபுரம் பெருமாள் கோவிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
திருச்சி பெல் கைலாசபுரம் வெங்கடாஜலபதி கோவிலில் நாளை 25-ந்தேதி மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

ராமானுஜரின் ஆயிர மாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி வேங்கமுடையான் கோவில் மூலஸ்தானம் மற்றும் ராமானுஜர் சன்னதி உள்ளது போன்ற தோற்றத்தை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்ட இந்த ராமானுஜர் ரதம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் 108 வைணவ திவ்விய தேசங்களுக்கு சென்று வருகிறது. 

இவ்வகையில் இந்த ரதம் இன்று 24-ந்தேதி இரவு திருவெறும்பூர் பெல் கைலாசபுரம் வந்து சேர்கிறது. நாளை 25-ந்தேதி காலை இந்த ரதம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வலம் வருகிறது. 


இந்த ரதம் மாலை மீண்டும் பெல் கைலாசபுரம் பகுதிகளில் வலம் வந்து பின் திருவெறும்பூர் தாலுகா ஆபீஸ் எதிரில் உள்ள முக்குலத்தோர் மேல் நிலைபள்ளி மைதானம் வருகிறது. அங்கு இரவு 7மணிக்கு திருப்பதி வேங்கட முடையான் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்க ள் பங்கேற்று திருமலையில் நடப்பது போன்றே திருக்கல்யாண உற்சவம் நடத்துகின்றனர். இதற்கென திருமலையில் இருந்து உற்சவ விக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் திருப்பதியில் இருந்து வருகின்றன. 

முன்னதாக இந்த ராமானுஜர் ரதம், திருச்சியை சுற்றியுள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட வைணவ திவ்விய தேசங்களுக்கு செல்கிறது. இவ்வகையில் இன்று காலை 9மணிக்கு திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடி அப்பக்குடத்தான் கோவில் செல்கிறது. தொடர்ந்து 11-30மணிக்கு அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் கோவிலுக்கும், மதியம் 1.30மணிக்கு திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலுக்கும்,மாலை 4மணிக்கு உத்தமர் கோவில் புருஷோத்தம பெருமாள் கோவிலுக்கும் 5மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலுக்கும் செல்கிறது.

ராமானுஜர் ரத வரவேற்பு மற்றும் திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை திருச்சி பெல் டவுன்ஷிப் ஸ்ரீவேங்கடாசலபதி சேவா சமிதியினர் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர். 

Similar News