தரவரிசை
விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம்

Published On 2022-05-28 11:26 GMT   |   Update On 2022-05-28 11:26 GMT
பிரவீன் இயக்கி நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் போத்தனூர் தபால் நிலையம் படத்தின் விமர்சனம்.
1990களில் படத்தின் கதை நகர்கிறது. நாயகன் பிரவீன் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பதற்காக வங்கி லோனுக்காக காத்திருக்கிறார். இவருடைய தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார்.

ஒரு நாள் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணத்தை, வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பில்லை என கருதிப் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள்.



திங்கக்கிழமை காலைக்குள் அந்த பணத்தை தபால் நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டர் மகன் பிரவீன், காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரவீன், இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். 1990 கால கட்டத்தில் திரைக்கதை நகர்வதால் அதற்கு ஏற்றார் போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார்கள். புதுமுக நடிகர் என்பதால் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக விறுவிறுப்பாக நகர்கிறது.



நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ், அமைதியாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக ஒரு சண்டைக்காட்சியில் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். போஸ்ட் மாஸ்டர், பிரவீனின் நண்பர் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் 90களின் காலகட்டத்தை அழகாக நம் கண்முன்னே நிறுத்தியுள்ளார். டென்மாவின் இசை திரைக்கதை ஓட்டத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘போத்தனூர் தபால் நிலையம்’ சிறப்பு.
Tags:    

Similar News